ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் ஒற்றையரில் இந்திய வீராங்கனை சிந்து வெண்கலம் வென்றார். பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா ஜோடி வெண்கலம் வென்றது.
தென் கொரியாவில் உள்ள கிம்சியான் நகரில், ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் சிந்து, சீனாவின் ஷிஜியன் வாங் மோதினர். முதல் செட்டை சிந்து 21–15 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட ஷிஜியன் வாங், இரண்டாவது செட்டை 22–20 என போராடி வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் ஏமாற்றிய சிந்து 12–21 என கோட்டைவிட்டார்.
ஒரு மணி நேரம், 18 நிமிடங்கள் வரை நீடித்த அரையிறுதியின் முடிவில் இந்தியாவின் சிந்து 21–15, 20–22, 12–21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இத்தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம், வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம், ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் வரலாற்றில், ஒற்றையரில் பிரிவில் வெண்கலம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக இந்தியாவின் அனுப் ஸ்ரீதர் (2007), செய்னா நேவல் (2010) வெண்கலம் வென்றனர்.
ஜுவாலா ஜோடி ஆறுதல்:
பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா ஜோடி, சீனாவின் லுயோ யிங், லுயோ யு ஜோடியை சந்தித்தது. 33 நிமிடங்கள் வரை நீடித்த அரையிறுதியின் முடிவில் இந்தியாவின் ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா ஜோடி 12–21, 17–21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தது. அரையிறுதிக்கு முன்னேறியதால், வெண்கலம் வென்றது. இதன்மூலம் ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் வரலாற்றில், இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற சாதனை படைத்தது.
.
